பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். ஈரோடு, காவிரிக்கரை தென் திசையில் கள்ளுக்கடை மேட்டில் எழுந்தருளியுள்ள பத்ர காளியம்மன் கோவில், குண்டம் திருவிழா பிப்.,21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் குண்டம் இறங்க காப்பு கட்டி விரதமிருக்கும் பக்தர்கள், ஆயிரக்கணக்கான மக்கள், காவிரி ஆற்றில் வைத்து பூஜிக்கப்பட்ட, பால் குடத்துடன் ஊர்வலமாக சென்றனர். கருங்கல்பாளையம், கிருஷ்ணா தியேட்டர், ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, மரப்பாலம், வழியாக கோவிலை ஊர்வலம் அடைந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. வரும், 8ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.