பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
திருப்பூர்: திருப்பூரில், மும்மதத்தினர் இணைந்து, நவசக்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவை கொண்டாடியது, நெகிழ செய்தது. திருப்பூர், புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே, ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் இணைந்து, 20 ஆண்டுகளுக்கு முன், நவசக்தி விநாயகர் கோவிலை கட்டினர். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, கோவில் கோபுரத்தில், சிலுவை, ஓம், பிறை நிலா பொறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவங்காபுரம் பள்ளி அருகில் உள்ள ஆட்டோ நண்பர்கள் குழு, புஷ்பா தியேட்டர் ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் சார்பில், நேற்று, கோவில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், மும்மதத்தினரும், ஆட்டோ டிரைவர்களும் பங்கேற்றனர்.