பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
ஊத்துக்கோட்டை: அங்காளம்மன் கோவிலில் நடந்த, முதலாம் ஆண்டு தீமிதி
திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த,
மேல்சிட்ரபாக்கம் கிராமத்தில் உள்ளது, அங்காளம்மன் கோவில். பழமை வாய்ந்த
இக்கோவில் சீரமைக்கப்பட்டு, தற்போது விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி,
கடந்த, 2ம் தேதி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில், கிராம பெண்கள்,
அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கரக ஊர்வலம் நடந்தது.
மறுநாள், 3ம் தேதி காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு, 9:00
மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான
நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. இதில் கிராமத்தைச்
சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீ மிதித்தனர். தொடர்ந்து
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை
வழிபட்டனர்.