பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பொங்கல் விழா 11-ம் தேதி நடக்கிறது. லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் இந்த விழாவில் முழுமையாக பிளாஸ்டிக்கை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரத்தில் கிள்ளியாாற்றின் கரையில் தங்கியதாகவும், அங்கு முதியவர் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோயில் கட்டப்பட்டு ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் என பெயர்பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா பிரசித்தி பெற்றதாகும். கடந்த மூன்றாம் தேதி கார்த்திகை நட்சத்திரத்தில் அம்மனை காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விழாவில் தினமும் தேவி பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் விழாவான 11-ம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. புதுமண்பானை, பச்சரிசி, வெல்லம், தேங்காய், நெய் ஆகியவை பொங்கலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் மண்பானை, அரிசி பூமியை பிரதிபலிக்கிறது. வாயு, ஜலம், வானம், அக்னி ஆகியவை பூதகணங்களை பிரதிபலிக்கிறது. இவ்வாறு இணைந்து தயாரிக்கப்படும் பொங்கலை அம்மனுக்கு நிவேத்யம் செய்யும் போது அஷ்டசித்தி கிடைக்கிறது. 11-ம் தேதி காலை 10.45 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள முக்கிய அடுப்பில் மேல்சாந்தி தீ மூட்டியதும், சுற்றியுள்ள லட்சக்கணக்கான அடுப்புகளில் பெண்கள் தீ மூட்டுவர் . பகல் 2.15 மணிக்கு பின்னர் பொங்கல் நிவேத்யம் நடைபெறும். ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது பிளாஸ்டிக் மலைபோல் குவிகிறது. கடந்த ஆண்டு ஒரளவு இது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்த முழுயைாக தடை விதிக்கப்பட்டு்ள்ளது. அன்னதானம் நடத்துபவர்கள் ஸ்டீல் கப், பிளேட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்றும், பக்தர்கள் பாலிதீன் பைகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு்ளளனர்.