பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திருவொற்றியூர்: திருவொற்றியூருக்கு, திருக்கல்யாணம் காண, மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து, தண்டாயுதபாணி சுவாமி வருகை புரிந்தார். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி திருக்கோவில் பிரசித்து பெற்றது. 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்திற்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். இந்நிலையில், இக்கோவிலின் மாசி பிரம்மோற்சவம், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சந்திரசேகரர் சுவாமி, ரிஷப, யானை, சிம்மம், அஸ்தமானகிரி விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வருவார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை, மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து வெள்ளி ரதத்தில், பழைய தண்டாயுதபாணி, புதிய தண்டாயுதபாணி சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். உடன், ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் முடிவுற்றது. அங்கு, மூன்று நாட்கள் தங்கி, 11ம் தேதி நடைபெறவிருக்கும் கல்யாண சுந்தரர் திருமண வைபவத்தை கண்ட பின், 12ம் தேதி, தண்டாயுதபாணி சுவாமி, பவளக்கார தெரு திரும்புவார்.