பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திருத்தணி: கிராம தேவதையான மத்துாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், 1,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் கிராம தேவதையாக விளக்கும் மத்துாரம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தீபாராதனை: கோவில் வளாகத்தில் ஐந்து யாகசாலைகள், 250 கலசங்கள் வைத்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, விசேஷ சாந்தி, கலச ஸ்தாபனம் மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு, கலச ஊர்வலமும், காலை, 10:00 புதியதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம் மற்றும் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகல், 11:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அலங்காரம்: மாலை 6:00 மணிக்கு, பரத நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் மத்துாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவில், காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமி, அரக்கோணம் எம்.பி., அரி, முருகன் கோவில் தக்கார் ஜெய்சங்கர், உட்பட திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சில பெண் பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.