பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, மேல்தொம்பை கிராமத்தில் மூன்று ஆண்டு களாக பூட்டியிருந்த மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, கீரிப்பட்டி பேரூராட்சி, மேல்தொம்பை மலை கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள், கோவிலில் வழிபாடு செய்து வந்தனர். அதே ஊரைச்சேர்ந்த வேலாயுதம் என்பவர், தன் இடத்தில் கோவில் உள்ளதாக கூறி, 2014ல், கோவிலுக்கு, பூட்டு போட்டதாக கூறப்படுகிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக, மேல்தொம்பை மலைவாழ் மக்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை இருந்தது. நேற்று, இந்து முன்னணியை சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி, தம்மம்பட்டி நகர தலைவர் சந்திரசேகர், நகர துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோவிலுக்கு போட்டிருந்த பூட்டை உடைத்து, கோவிலை திறந்தனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், மழை வேண்டி குடங்களில் எடுத்து வந்த தண்ணீரை, மாரியம்மன் சிலை மீது ஊற்றி வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த சில மணி நேரத்தில் மழை பெய்ததால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.