திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8:30 மணிக்கு சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். நமச்சிவாய கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர், இரண்டாவதாக வள்ளி தேவசேனாசமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவது சண்டிகேஸ்வரர்கள் என நான்கு தேர்களுக்கு மத்தியில் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் தேரில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர்‚ கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.