கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமட்டாரப்பள்ளி கோவிந்தராஜுலு கோவிலில், சுவாமிக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி - வரட்டனப்பள்ளி சாலையில் உள்ள சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலையில், கோவிந்தராஜுலு சுவாமி கோவிலில், 43ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10ல் கருட வாகன உற்சவம் நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி பெண்கள் சீர்வரிசைகளுடன் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மதியம், 1:45 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜுலு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று யானை வாகனத்தில் சுவாமி ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை ஆஞ்சநேயர் வாகனத்தில் ஊர்வலம் நடக்க உள்ளது. 15ல் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.