பதிவு செய்த நாள்
15
மார்
2017
12:03
பொள்ளாச்சி : ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நேற்று நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த 12ம் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான்சிரசு, ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. 63 அடி உயரம் உள்ள பெரிய தேரில், கண்ணபிரான், தர்மராஜா, திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும், 27 அடி உயர தேரில், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், வடம் பிடித்த இரண்டு தேரும், குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து நிலை நிறுத்தப்பட்டது. இரவு 9:30 மணி முதல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன; அருளாளிகள், பக்தர்கள் குண்டத்தில் இறங்க தயாராக வந்தனர். முதலில், அம்மன் அருளாளி தண்டபாணி, பூச்செண்டு உருட்டி குண்டத்தில் இறங்கினார். அவரை தொடர்ந்து, விரதமிருந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் வரிசையாக இறங்கினர். மேலும், பக்தர்கள், ஒன்பது அடி அலகு குத்திக்கொண்டும் குண்டம் பூவில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். திரளான பக்தர்கள், பங்கேற்று, குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். குண்டம் இறங்கும் நிகழ்ச்சியையடுத்து, திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் தேர் ஊர்ந்து சென்ற போது, பலரும் பழங்களை வீசி எறிந்து, தர்மராஜா மற்றும் திரவுபதியம்மனை வழிபட்டனர். மேலும், குண்டத்தில் இறங்கிய பக்தர்கள், பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். பின், மாலையில், தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. அம்மனின் தாய் வீடு என அழைக்கப்படும் வீட்டில் இரவு நிலை நிறுத்தப்படும். தொடர்ந்து, இன்று திருத்தேர் நிலை நிறுத்தம்; ஊஞ்சல், பட்டாபிேஷகமும்; நாளை மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.