பதிவு செய்த நாள்
24
மார்
2017
01:03
ஈரோடு: பழனி கோவிலுக்கு, பஞ்சாமிர்தம் செய்ய, கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட்டில் இருந்து, நாட்டு சர்க்கரை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கவுந்தப்பாடியில் உள்ள சர்க்கரை மார்க்கெட், தமிழக அளவில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டாகும். இங்கு வெல்லம், நாட்டு சர்க்கரை அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பழனி தேவஸ்தான கோவில் பஞ்சாமிர்தத்துக்கு, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அங்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க, இங்கிருந்து நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த மூன்றாண்டுக்கு முன், தேவஸ்தானம் சார்பில், தங்களுக்கு ஆண்டுக்கு, ஒரு லட்சம் மூட்டை நாட்டு சர்க்கரை தேவைப்படுவதாகவும், அவ்வளவு மூட்டை இங்கு கிடைக்கவில்லை என, கூறி, நேரடி கொள்முதலை நிறுத்தியது. ஸ்டேட் டிரேடிங் கார்பரேஷன் மூலம் பழனி தேவஸ்தானம் நாட்டு சர்க்கரையை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய துவங்கியது. ஸ்டேட் டிரேடிங் கார்பரேஷன் தனியார்களிடம் இருந்தும், புரோக்கர்கள் மூலமும் பல்வேறு இடங்களில், கமிஷன் அடிப்படையில் கொள்முதல் செய்து, பழனி கோவிலுக்கு வழங்கி வருகிறது.
கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட்டில், 60 கிலோ மூட்டை, 2,050 முதல், 2,100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஸ்டேட் டிரேடிங் கார்பரேஷன் மூலம், 2,200 முதல், 2,300 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால், தேவஸ்தான பணம் விரையமாவதுடன், தரமற்ற சர்க்கரையையும், ஒரே தரமுடைய சர்க்கரையையும் கொள்முதல் செய்ய முடியாமல் போகிறது. கடந்த மூன்றாண்டில் தேவஸ்தானம் எடுத்த இந்த முடிவால், பழனியில் தேவஸ்தானம் தயாரித்து விற்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விற்பனை குறைந்து, தனியார் நிறுவனங்களின் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளது. இதுபற்றி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டபோது, பழனி தேவஸ்தானம் சார்பில் விபரம் தர மறுத்துவிட்டனர். பக்தர்களுக்கு தரமான பஞ்சாமிர்தம் வழங்கவும், சர்க்கரை விவசாயிகள் பயன்பெறவும், கவுந்தப்பாடி மார்க்கெட்டில் இருந்து, சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டுமென, ஈரோடு கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கான முயற்சி மேற்கொண்டு, விவசாயிகள், மார்க்கெட் நிர்வாகம், அதிகாரிகள், பழனி தேவஸ்தானம் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது, தங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை கிடைக்கவில்லை எனக்கூறி, ஸ்டேட் டிரேடிங் கார்பரேஷன் மூலமே கொள்முதல் செய்வதாக கூறி சென்றனர்.
கவுந்தப்பாடி மார்க்கெட்டில் ஆண்டுக்கு, 25 லட்சம் மூட்டை வரை சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறது. பழனி தேவஸ்தானத்துக்கு, ஒரு லட்சம் மூட்டை மட்டுமே சர்க்கரை தேவைப்படுகிறது. எனவே, மீண்டும் கவுந்தப்பாடியில் இருந்து மொத்தமாக பழனி தேவஸ்தானம் கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.