சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2011 11:11
திருநெல்வேலி:கந்தசஷ்டி திருவிழாவை தொடர்ந்து குறுக்குத்துறை மற்றும் சாலைக்குமார சுவாமி கோயில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு நெல்லை சிந்துபூந்துறை சாலைக்குமார சுவாமி கோயிலில் அம்பாள் தபசு காட்சியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சுவாமி காட்சி கொடுத்தல் வைபவம் நடந்தது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி சிஎன்.கிராமத்தில் தபசு காட்சியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேலக்கோயில் அருகில் உள்ள 7ம் திருநாள் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபோல் சூரசம்ஹாரம் நடந்த பாளை.சிவன் கோயில், மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட நெல்லையில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.