பதிவு செய்த நாள்
28
மார்
2017
12:03
மதுரை;எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும். அதர்மம் செய்யக்கூடாது. பகவத் சிந்தனையுடன் இருக்க வேண்டும், என சிருங்கேரி சங்கர மடம் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை வழங்கினார். மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதா கோயிலுக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று மாலை வந்தனர். தர்மகாரியதரிசி சங்கரநாராயணன், பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் பூரண கும்ப மரியோதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதீ தீர்த்த சுவாமி பேசியதாவது: மதுரைக்கும், சிருங்கேரி மடத்துக்கும் நுாற்றாண்டு கால தொடர்பு உண்டு. இதற்கு அம்மன் சன்னதி யில் உள்ள சிருங்கேரி மடம் சாட்சியாக விளங்குகிறது. அந்த மடத்தில் ஆச்சாரியார்கள் தங்கியிருந்து சீடர்களுக்கு அருளுரை வழங்கி வந்தனர். மீனாட்சி அம்மன்கோயிலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜை, ஆராதனைகள் செய்து வந்தனர். அந்த வரிசையில் நானும் மீனாட்சிஅம்மன் கோயிலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜைகள் நடத்தி வருகிறேன். நான், எனது ஆச்சாரியார் மீது எவ்வளவு பக்தி, பற்று வைத்திருந்தேனோ, அதே பக்தியும், பற்றும் என் மீது சீடர் (விதுசேகர பாரதீ சுவாமி) வைத்துள்ளார்.
இது குரு, சீடர் ஒற்றுமையை குறிக்கிறது. எனது குருநாதன் என்னை சீடர்க்ளுக்கு அறிமுகம் செய்து இவர் தான் அடுத்த குரு, என்றார். அதே போல் சீடரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கடமை என்னிடம் உள்ளது. அதற்காகவும், மகாருத்ரம் சத்சண்டீ பாராயணம், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்வதற்காகவும் மதுரை வந்துள்ளேன்.எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும். அதர்மம் செய்யக்கூடாது. பகவத் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்றார். விதுசேகர பாரதீ சுவாமி உபன்யாசம் செய்தார். இன்று (மார்ச் 28) முதல் ஏப்.,2 வரை காலை 7:30 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பாத பூஜை, மாலை 5:00 மணிக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமியின் உபன்யாசம். இரவு 8:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது.