பதிவு செய்த நாள்
05
நவ
2011
10:11
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எனப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி அன்னாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்த சோழ பேரரசின் தலைநகராகவும் இவ்வூர் விளங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், தனது (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான், உலகிலேயே மிக பெரிய சிவலிங்கம் என போற்றப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இக்கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெட்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இக்கோவிலில் சரஸ்வதியும், லெக்ஷ்மியும், தியான கோலத்தில் அமர்ந்துள்ளதால், ஞான சரஸ்வதி, ஞான லெக்ஷ்மி என அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.தற்போது ஐ.நா., சபையின் யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்று தொட்டு, ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளன்று நடந்து வந்த அன்னாபிஷேகம், இடையில் நின்று விட்டது. இந்நிலையில், காஞ்சி பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் முயற்சியால் 26 ஆண்டுக்கு முன், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் கும்பகோணம் சங்கரமடம் சார்பில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை மூலம் பெறப்படும் 100 மூட்டை அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் வடிக்கப்படும் சாதத்தால், அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, வரும் 10ம் தேதி, ஐப்பசி பவுர்ணமி நாளன்று நடக்கவுள்ள அன்னாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் சங்கரமடம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கம் வந்திருந்து அன்னாபிஷேகத்தை கண்டுகளிப்பது வழக்கம்.அதன்படி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.