பதிவு செய்த நாள்
05
நவ
2011
10:11
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, பல லட்சம் மதிப்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ரயில்வே ஸ்டேஷன் அருகே, கோவிலுக்குச் சொந்தமான ராம் பார்க்கில், 130 லட்ச ரூபாய் மதிப்பில், ஆண்,பெண்களுக்கு தனித் தனியாகத் தங்கும் விடுதிகள், கார் பார்க்கிங், கோவில் வடக்கு நந்தவனத்தில், 65 லட்ச ரூபாய் மதிப்பில் வளாகம் கட்டுவதற்கும், ஏற்கனவே உள்ள தங்கும் விடுதிகளில், அறைகளை பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கவும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று, ராமேஸ்வரம் வந்த அறநிலையத் துறை முதன்மை இன்ஜினியர் மோகனன், மதுரை மண்டல நிர்வாக இன்ஜினியர் கணேசன், கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்ட இன்ஜினியர் மயில்வாகனன் ஆகியோர், கோவில் பிரகார மேல்தளத்தில் நடந்த பணிகளைப் பார்வையிட்டனர். பர்வதவர்த்தனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் பணி, மராமத்து செய்யப்படவுள்ள தங்கும் விடுதிகள், கோவிலுக்குச் சொந்தமான இடங்களைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.