தேரோட்டம் அடுத்தாண்டு நடக்குமா? என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. நாமக்கல், மலைக்கோட்டையின் மேற்குபுறத்தில் நரசிம்மர் சுவாமி குடவறை கோவில் உள்ளது. இக்கோவிலின் எதிரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர், வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 2ல் துவங்கியது. கடந்த, 8ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலையில் நடந்தது. நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், ஆர்.டி.ஓ., ராஜசேகரன் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். நரசிம்மர் சுவாமி கோவில் தேர் பழுதான நிலையில் இருப்பதால், கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் நரசிம்ம சுவாமி தேர் இழுக்கப்படவில்லை.
இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: நரசிம்மர் சுவாமி கோவில் தேர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த தேரும், சிற்பங்களும் மிகவும் சேதமடைந்து விட்டன. அவற்றை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் தேரோட்டம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.