பதிவு செய்த நாள்
12
ஏப்
2017
02:04
குளித்தலை: கள்ளை காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, எட்டுப்பட்டி கிராமங்கள் பங்கேற்ற தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த கள்ளையில், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி கோவில்கள் உள்ளன. ஆண்டு தோறும் கோவிலில், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில், முதல் நாள் அம்மனுக்கு பூப்போடுதல், கரகம் பாலித்தல்,
கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின் நேற்று அதிகாலை, 6:00 மணியளவில் கள்ளை காளியம்மன் தேரோட்டம் நடந்தது.
அப்போது, பகவதி அம்மன் முத்துப் பள்ளக்கிலும், கருப்பசாமி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். காளியம்மன் தேர், முத்துப்பள்ளக்கு, குதிரை வாகனம் ஆகியவற்றுடன் கோவில் வளாகம் வந்தவுடன், அங்கு தயார் நிலையில், நேர்த்திக்
கடனுக்காக வைக்கப்பட்டு இருந்த எருமை கிடாக்களை வெட்டி, கள்ளை காளியம்மனுக்கு பலியிட்டனர். அதன்பின், மஞ்சள் நீராடுதல், கரகம் எடுத்து விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர். விழாவில், கள்ளை, சுக்காம்பட்டி, மங்காம்பட்டி, சின்னாகவுண்டன்பட்டி, குழந்தைபட்டி, மணியகவுண்டன்பட்டி, பூவாயிபட்டி, கொக்ககவுண்டன்பட்டி ஆகிய
எட்டுப்பட்டி மக்கள் பங்கேற்றனர்