பதிவு செய்த நாள்
08
நவ
2011
10:11
சென்னை : தமிழகத்தில், 60 ஒட்டகங்கள், ஆயிரக்கணக்கான ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு, இறைச்சி தானத்துடன் பக்ரீத் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஏழைகளும் மாமிசம் உண்டு, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆடு, மாடுகளைப் பலிகொடுத்து, இஸ்லாமியர்கள் இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். இது, குர்பானி எனப்படும். ஆரம்பத்தில், ஆடு, மாடுகளை குர்பானி கொடுத்தோர், சில ஆண்டுகளாக, அரபு நாடுகள் போன்று, ஒட்டகத்தை குர்பானி கொடுத்து வருகின்றனர். ஒட்டகத்தின் விலை அதிகம் என்பதால், ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்து, கூட்டு குர்பானி கொடுக்கின்றனர். இதற்காக, பத்து நாட்களுக்கு முன், ராஜஸ்தானிலிருந்து 60 ஒட்டகங்கள், ஆந்திரா வழியாகத் தமிழகம் வந்தன. பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடிய நிலையில், தமிழகம் முழுவதும், 60 ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, ஆயிரக்கணக்கான ஆடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டு, ஏழைகளுக்கு இறைச்சியைத் தானமாக வழங்கி, இஸ்லாமியர்கள் பக்ரீத்தை கோலாகலமாகக் கொண்டாடினர். "கடந்த ஆண்டில், 110 ஒட்டகங்கள் வரை, குர்பானி கொடுக்கப்பட்டன. அப்போது, ஒட்டகத்தின் விலை 25 ஆயிரம் ரூபாய் வரை தான் இருந்தது. தற்போது, 45 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்ததால், ஒட்டகங்கள் குர்பானி கொடுப்பது குறைந்துள்ளது என, இஸ்லாமிய அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். இதையொட்டி, த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், பொது இடங்களைத் தேர்வு செய்து, சிறப்பு தொழுகைகள் நடத்தின. தமிழகம் முழுவதும், மசூதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடந்தன.