பதிவு செய்த நாள்
02
மே
2017
12:05
புதுடில்லி: சமூக சீர்திருத்தவாதியும், வைணவ துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர், என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வைணவத் துறவி: ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் தலை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது: எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் வேறுபாடின்றி வாழ்ந்து காட்டியவர் ராமானுஜர். சுயநலம் சிறிதும் இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறு உபதேசங்களை வழங்கிய அவர், அதன்படியே வாழ்ந்தும் காட்டினார்.மக்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச மந்திரம் ஏன் ஒருவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். அதை அனைவரும் அறிந்து முக்தி நிலை பெறட்டுமே எனக் கருதி, ஏழைகள், பாமரர்கள் கூடிய சபையில் மோட்ச மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார். இதிலிருந்தே அவரின் விசாலமான எண்ணம் நமக்கு புரிகிறது. தன் முன்னோர் வகுத்து வைத்த பிற்போக்கான நடைமுறைகளை தகர்த்ததன் மூலம் அவர் காலத்து துறவிகளுக்கு முன்னோடியாக விளங்கினார் ராமானுஜர். சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பினரும் சமம் என்பதை நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் ரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் வசம் மட்டுமே இருந்தது. ராமானுஜர் இந்த நடைமுறையை மாற்றினார். கோவில் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.
ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கும் சில பொறுப்புகள் வழங்கப்பட்டன. கோவில் என்பது அனைத்து மக்களுக்கான புகலிடமாக மாறியது. அங்கு பலர் பசியாறினர்; உடை இல்லாதோருக்கு உடை வழங்கப்பட்டது. இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. வாழ்க்கையை முறைப்படுத்த, நல்ல போதனைகள் வழங்கப்பட்டன.
ராமானுஜர் அமல்படுத்திய சீர் திருத்தங்கள், இன்றும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளன. ஜாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்த அந்தக் காலத்தில் ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க ராமானுஜர் மிகப் பெரும் பங்காற்றினார். அவரது வாழ்க்கை முறை மற்றும் போதனைகளால் பிற மதத்தை சேர்ந்தோரும் ஏற்றுக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டில்லியை ஆண்ட சுல்தானின் மகள் தான் பீவி நாச்சியார் என்பது இன்று பலருக்கும் தெரியாத உண்மை. கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை கோவிலில் இவரது சிலையை நிறுவியவர், ராமானுஜரே. ராமானுஜரின் பெருமை குறித்து அம்பேத்கர் 1927ல் எழுதிய கட்டுரையில் மிக அருமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதிலிருந்து சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட ராமானுஜர் அரும்பணியாற்றினார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குரு தன் வீட்டில் உணவருந்திச் சென்ற பின் வீட்டை சுத்தப்படுத்திய தன் மனைவியின் செயலால் ராமானுஜர் மிகவும் மனம் வருந்தினார்; அதை கடுமையாக எதிர்த்தார். தன் மனைவியின் செயல் அவரை மிகவும் பாதித்தது. அந்த பாதிப்பே இல்வாழ்க்கையை துறந்து அவரை சன்னியாசம் பெற துாண்டியது. அவர் வெறும் உபதேசம் மட்டும் தரவில்லை; அவரது உபதேசத்தின்படி வாழ்ந்தும் காட்டினார். பெண்களுக்கு சமநீதி, சம அந்தஸ்து வழங்கியதில் ராமானுஜருக்கு நிகர் ராமானுஜரே என, அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகளில் ராமானுஜரின் போதனைகள் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. சமுதாயத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டுள்ளன. முற்போக்கு சிந்தனைகள் பெருகியுள்ளன; கடவுளின் முன் அனைவரும் சமம்; பக்தி அனைவருக்கும் பொதுவானது என்ற ராமானுஜரின் சிந்தனை போற்றத்தக்கது. ராமானுஜர் வழிகாட்டுதலின் படி ஏழைகள், பெண்கள் ஒடுக்கப்பட்டோர் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமநீதி கிடைக்க நாம் அனைவரும் பாடு பட வேண்டும். ராமானுஜரின் கொள்கைகளை வழிகாட்டுதலை போதனைகளை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வது நம் கடமை. இந்த தருணத்தில், அவரது தபால் தலையை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.