பதிவு செய்த நாள்
10
நவ
2011
11:11
மதுரை : மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில், 13 ஆண்டுகளுக்கு பின், ரூ.50 லட்சத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன. ஓராண்டிற்குள் இப்பணி முடிக்கப்படும்.மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இக்கோயிலில், திருப்பணிகளுக்கான பூஜை நவ.,7ல் நடந்தது. கோயில் விமானம் சீரமைப்பு மற்றும் வர்ணம் அடிக்க ரூ.4 லட்சம், கமலம் வர்ணம் அடிக்க ரூ.2.50 லட்சம், தண்ணீர் கலந்த ரசாயன முறையில் கற்தூண்களையும், சிற்பங்களையும் புதுப்பிக்க ரூ.23 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், கோயில் மேற்கூரையில் தட்டோடு, டைல்ஸ் கற்கள் பதிக்கவும், அன்னதான கூடம் கட்டவும் தலா ரூ.10 லட்சம் உட்பட அனைத்து செலவுகளையும் சேர்த்து திருப்பணிகளுக்கு ரூ.50 லட்சம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதலில், தண்ணீர் கலந்த ரசாயன முறையில் சுத்தப்படுத்த, டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், இரு நாட்களில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அனைத்து பணிகளையும் ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடியும்தருவாயில் கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும்.