பதிவு செய்த நாள்
10
நவ
2011
11:11
புதுச்சேரி : 130 நாடுகளில் திருப்பயணம் புறப்பட்ட புனிதர் தொன் பாஸ்கோவின் வலது கரம் வைக்கப்பட்ட மெழுகுசிலை உடல் இரண்டு நாள் தரிசனமாக நேற்று புதுச்சேரி வந்தடைந்தது. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில் புனிதர் என்று அறிவிக்கப்பட்ட தொன் போஸ்கோ 1815ம் ஆண்டு தேதி இத்தாலியில் உள்ள பெக்கி என்னும் சிற்றூரில் பிறந்தார். 1859ம் ஆண்டு சலேசியா சபையை நிறுவி நற்பணிகளை செய்து வந்தார். கடந்த 1888 ஆம் தனது 72 வயதில் தொன் போஸ்கோ இறந்தார். இவர் இறந்த 46 ஆண்டுகளுக்குப் பிறகு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் மறைந்த பின் அவரது கல்லறையைத் தோண்டிய போது வலது கரம் மட்டும் சிறையாமல் முழுமையாக இருந்தது. 2009ம் வலது கரம் தொன் போஸ்கோ மெழுகு சிலையின் மார்பு பகுதிக்குள் வைக்கப்பட்டு இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வந்தது. புனித தொன் போஸ்கோவின் 200வது பிறந்த நாள், சலேசியா சபை நிறுவி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1815-2015 என எழுதப்பட்ட கண்ணாடி திருப்பேழையில் வைக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் தரிசனத்திற்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு துவங்கிய இப்பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைக் கடந்து மே மாதம் 1 ம்தேதி இந்தியா வந்தடைந்து.
விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக நேற்று புதுச்சேரி மாநில எல்லைக்கு வந்தடைந்த திருபேழைக்கு நேற்று ஏராளமான கிறிஸ்துவர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் திருப்பேழை புதுச்சேரியில் உள்ள தொன் போஸ்கோ நிறுவனங்களுக்கும், அருகாமையில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களுக்கும் தரிசனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2 மணி முதல் 2.25 மணி வரை தட்டாஞ்சாவடி தொன் போஸ்கோ மாணவர் இல்லத்திலும், 2.30 மணி முதல் மாலை 4.30 வரை தாகூர் நகர் நகரில் உள்ள தூய ஆவி ஆலயத்திலும், மாலை 5 மணி முல் 7.30 மணி வரை மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்ம ராக்கினி பேராலயத்திலும், 7.45 முதல் 9 மணி வரையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4.30 வரை தாகூர் நகரில் உள்ள தூய ஆவி ஆலயத்திலும் மக்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. புதுச்சேரி - கடலூர் மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர்,முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன், அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அடுத்து இலங்கை வழியாக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் தொன் போஸ்கோ திருப்பேழை 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ம்தேதி அவர் பிறந்த நாடான இத்தாலி நாட்டிற்கு சென்றடைகிறது.