மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி சிவன்கோவில் 13ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. மடத்துக்குளம் பகுதியில் முக்கியமானதாகவும், வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகவும் உள்ள இந்த கோவில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கோவிலின் படிக்கட்டுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் ஆலோசித்து பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்தனர். இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கருவறைக்குள் சிறப்பு பூஜைகள் செய்து கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. கோவில் புதுப்பிக்கும் ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.