பதிவு செய்த நாள்
11
மே
2017
02:05
அந்தியூர்: அந்தியூர் அருகே, கோவிலூரில் பழமை வாய்ந்த செலம்பூரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த ஏப்., 26ல் பூச்சாட்டுதலுடன், கம்பம் நடப்பட்டு விழா துவங்கியது. தினந்தோறும் பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பூசி வேப்பிலை வைத்து வணங்கினர். கடந்த, 9ல், எண்ணமங்கலம் மாரியம்மன் கோவிலில் இருந்து, செலம்பூரம்மன் உற்சவர் சிலையை அலங்கரித்து, பல்லக்கில் வைத்து, மேலதாளங்கள் முழங்க, ஊர்வலமாக செலம்பூரம்மன் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விறகுகளை கொண்டு, 60 அடி நீள குண்டம் தயார் செய்யப்பட்டது. நேற்று காலை, 9:00 மணியளவில், அம்மை அழைத்து வாக்கு கேட்டனர். வாக்கு கிடைத்ததும், பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று மாலை, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் விழா முடிவடைகிறது. பர்கூர் மலை வனப்பகுதியை ஒட்டி கோவில் அமைந்துள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தபோது, அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அப்போது, அதிரடிப்படை போலீசாரின் கட்டுப்பாட்டில் விழா நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.