பதிவு செய்த நாள்
12
மே
2017
01:05
செஞ்சி: செத்தவரை மோனசித்தர் ஆசிரமத்தில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை–நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில், சிவஜோதி மோனசித்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாத பெருமான் கோவிலில், ஆறாம் ஆண்டு சித்திரை பெருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை 5:00 மணிக்கு, கொடியேற்றம், மாலை 6:00 மணிக்கு, விநாயகர் புறப்பாடு நடந்தது. மறுநாள் காலை 7:30 மணிக்கு, முதல் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து, 8:30 மணிக்கு, திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு அபிஷேகமும், காலை 10:00 மணிக்கு, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பால் அபிஷேகமும் செய்யப்பட்டது.மாலை 3:00 மணிக்கு, சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி, 4:30 மணிக்கு, மீனாட்சியம்மன் பொன்னுாஞ்சல் தாலாட்டு பெருவிழா, 6:00 மணிக்கு, மீனாட்சி–சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாண பூஜைகளை, சிவஜோதி மோனசித்தர் நடத்தினார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதமும் வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீசிவஜோதி மோன சித்தர் தர்ம பரிபாலன ஆசிரமம் மற்றும் டிரஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், பக்தர்கள், செத்தவரை, நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் செய்திருந்தனர்.