பதிவு செய்த நாள்
24
மே
2017
12:05
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி கொளுத்தும் வெயிலில் நீர்மோர் வழங்கும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இரு மாதங்களாக பகல் நேரத்தில் வெயில்
கொளுத்தி வருகிறது.
இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் நலன் கருதி மாடவீதியில், பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக குளிர்ச்சிக்கு வெள்ளை பெயின்ட் அடித்தும், மேட் (நடைபாதை
விரிப்பு) அமைத்துள்ளனர்.
தற்போது, அக்னி வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுதவிர, தமிழகத்திலேயே, திருத்தணி நகரில் தான் அதிகளவில் வெயில்கொளுத்துகிறது.இந்நிலையில், இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவின் பேரில், திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்களுக்கு நீர்மோர்மற்றும் வெல்லம் கலந்த பானகம் வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
கோவில் இணை ஆணையர் சிவாஜி தலைமை வகித்தார். இதில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், கலந்து கொண்டு நீர்மோர் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.
வெயில் காலம் முடியும் வரை கோவில் நிர்வாகம் சார்பில், தினமும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படும். இது குறித்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் கூறுகையில், இந்து சமய
அறநிலைய துறை ஆணையரின் உத்தரவின் பேரில், இன்று (நேற்று) முதல், முக்கிய கோவில்களில் நீர்மோர் மற்றும் பானகம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
காலை, 11:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து நீர்மோர் வழங்கப்படும்.
பக்தர்களுக்கு, நீர்மோர் வழங்குவதற்கு விருப்பம் உள்ளோர், கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்து நீர்மோர் தரலாம். வெயில் காலம் முடியும் வரை, இந்த நீர்மோர் வழங்கும் திட்டம் இலவசமாக வழங்கப்படும், என்றார்.