பதிவு செய்த நாள்
14
நவ
2011
11:11
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 37 ஆண்டுகளுக்குபின் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விக்கிரமசிங்கபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. 10ம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீஸ்கந்த ஹோமம், இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், 9 மணிக்கு முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. 11ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 12ம் தேதி நான்காம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது.கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 8 மணிக்கு நாடிசந்தானம், 8.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு கடம் புறப்படுதல் ஆகியன நடந்தது. காலை சுமார் 9.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகமும், மதியம் 1.30 மணிக்கு மகாபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு மூலவர் அலங்கார சிறப்பு வழிபாடு நடந்தது.கும்பாபிஷேகத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. கும்பாபிஷேக பூஜையை கோயில் அர்ச்சகர் நாகராஜபட்டர், சிவந்தியப்பர் கோயில் கல்யாணசுந்தரம் (எ) சிவாபட்டர், ஆலடியூர் ராமலிங்கபட்டர் செய்திருந்தனர். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் அனுக்கிரஹா ஏஜன்சி சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக விசிறியும், தொப்பியும் வழங்கப்பட்டது.குப்பாபிஷேக நிகழ்ச்சியில் அம்பை ஒன்றிய அதிமுக செயலாளர் தாயப்பராஜா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவி மனோன்மணி, சிவந்திபுரம் திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் சொரிமுத்து, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முருகன் செட்டியார், வள்ளி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வேம்பு, விக்கிரமசிங்கபுரம் பண்ணை ரமேஷ், நகராட்சி துணைத் தலைவர் கணேசபெருமாள், வார்டு கவுன்சிலர் ஜெயலெட்சுமி, திருவாவடுதுறை ஆதீன ஓதுவார் முருகையாபிள்ளை உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.