பதிவு செய்த நாள்
14
நவ
2011
12:11
ஸ்ரீ ஐயப்பனின் சபரிமலை வழிபாட்டில் உள்ள தத்துவங்கள் மிகமிக அபூர்வமானவை அவை
புராணங்கள் பதினெட்டு : தேவாசுரப் போர் 18 நாள். தர்மத்தை நிலை நாட்ட பாரதப் போர் 18 நாள் கீதையின் அத்தியாயங்கள் 18. இதைப் போல் மனித வாழ்வை இயக்கும் 18 அம்சங்களின் அடிப்படையாக அமைக்கப்பட்டவை ஐயப்பனின் ஆலயப் படிகள். அவற்றை அறித்தும்-கடந்தும் மெய்ஞான நிலை பெற்றால் ஐயப்பனின் அருட் பாதம் கிட்டும் என்பது தத்துவ உண்மை.
அவை : காமம், குரோதம், மதம், மாச்சரியம், லோபம், டம்பம் ஆகிய அஷ்ட ராகங்கள் என்னும் எட்டு மனவெழுச்சிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் 5 சத்வ ராஜஸ, தாமஸ ஆகிய 3 குணங்கள் : வித்யை, அவித்யை ஆகிய 2 சக்திகள் தாம் 18 படிகளின் அம்சங்கள்.
(இன்னொரு விளக்கம் : நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், 4 உபாயங்கள், நான்கு வர்ணங்கள் இவற்றை அந்தப் பதினெட்டு படிகளும் குறிப்பிடுவதாக சில பெரியோர்கள் கூறுவதுண்டு.
மந்திரம் மகிமை : மந்திரத்தின் சக்திக்கு நிதர்சனமாக இருப்பது ராம மந்திரமும், ஐயப்ப மந்திரமும், ஸ்ரீராமரின் பக்தனான ஆஞ்சநேயர், ராமா என்று கூறிக் கொண்டே சமுத்திரத்தைத் தாவிக் கடந்து விட்டார். ஆனால் ராமபிரானோ பாலம் கட்டித்தான் கடந்தார். அது போல், சுவாமி ஐயப்பனோ பல்வேறு ஆயுதங்களை உபயோகித்து மகிக்ஷியைச் சம்ஹரித்தார். ஆனால் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற நாமாவளியைக் கூறியே பக்தர்கள் கடினமான மலைகளில் ஏறி விடுகின்றனர். துன்பங்களை வெல்கின்றனர்.
திருமேனி தத்துவம் : ஐயப்பன் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை யோக நிலை என்பர். அத்துடன் அதற்கு வேறு சில விளக்கங்களையும் மகான்கள் அளிக்கின்றனர்.