பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
02:06
சத்தியமங்கலம்: திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சத்தியமங்கலம் அருகே, கெம்பநாயக்கன்பாளையம் டேம் சாலையில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு திருமணத்தடை
நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நேற்று நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன், சகல வகையான தோஷங்கள் நீங்க, பதிக பூஜை, பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொள்வதன் மூலம், நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய்தோஷம், நாக தோஷம் உட்பட எல்லாவிதமான தோஷ கிரஹம் விலகி உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. திருமணத்தடை நீக்கும் திருத்தலங்களான திருமணஞ்சேரி, காளஹஸ்தி, கூடுதுறை, கொடுமுடி ஆகிய ஊர்களில் செய்யும் பூஜை வழிபாடுகள், கிரஹ தோஷ நிவர்த்திகள் செய்யப்பட்டன.
ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,000த்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி யாகம் நடந்தது. இதையொட்டி சத்தியமங்கலம் மற்றும் கோபியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.