பதிவு செய்த நாள்
15
நவ
2011
11:11
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கோவிலில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர் வெளியேறும் வகையில், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில், கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. குண்டம் திருவிழாவில் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். பிரசித்தி பெற்ற கோவிலில் சென்ற தி.மு.க., ஆட்சியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் நிறுவப்பட்டது. தேர் தயாரிக்கப்பட்டதோடு சரி, ஸ்வாமி திருவீதி உலா இன்னும் துவங்கவில்லை. தங்கத் தேர் ஓடி வர, சரியான கான்கிரீட் தளம் இல்லாததே காரணம். கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒடுக்கீடு கோரப்பட்டது. தி.மு.க.,ஆட்சியில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியை அறநிலையத்துறை வழங்காததால், கான்கீரிட் தளம் அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனிடையே, பாரியூர் கோவிலில் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மழை தண்ணீர் வெளியேறும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.