பதிவு செய்த நாள்
15
நவ
2011
11:11
இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று "கிடா வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16 வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது. தங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர். ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார். இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று "கிடா வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில்," தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன் என்றார்.