பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
03:06
நாமக்கல்: ”மாவட்டத்தில், 277 கோவில்களுக்கு, 2.50 கோடி ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, ஒரு கால பூஜை நடக்கிறது,” என, அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி பூஜை உபகரணங்கள் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில், ஒரு கால பூஜை நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அத்திட்டத்தை சீரமைத்து, 11 ஆயிரத்து, 900க்கும் மேற்பட்ட கிராமப்புற கோவில்கள் பயனடைந்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் கிராமப்புற கோவில்களில், 10 ஆயிரம் சிறிய கோவில்களுக்கு, உபகரணங்கள் வழங்க, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 2015 - 16ம் நிதியாண்டில், 340 திருக்கோவில்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், 277 கோவில்களுக்கு, 2.50 கோடி ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, ஒரு கால பூஜை நடக்கிறது. தற்போது, 370 சிறு கோவில்களுக்கு, 9.25 லட்சம் ரூபாய் மதிப்பில், பூஜை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் சரோஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உள்பட பலர் பங்கேற்றனர்.