மதுரை: பழநி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச காவடியாட்டத்தை முன்னிட்டு மதுரையில் மயில் இறகு சேகரிப்பில் வாலிபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கிடைக்கும் மயில் இறகுகள் அழகான கண்ணுடன் நீளமாக இருப்பதால் காவடி பக்தர்களிடையே கிராக்கி அதிகரித்துள்ளது.
பழநி கோயில் தைப்பூசம் அடுத்தாண்டு ஜன.,31ல் நடக்கிறது.பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பறவைக்காவடி, மயில் காவடி, வெட்டிவேர் காவடி எடுத்து வருவர். மயில் காவடிக்காக ஆறு மாதத்திற்கு முன்பே மயில் இறகுகளை பக்தர்கள் சேகரித்து வருகின்றனர். பழநி செல்லும் மதுரை பாதயாத்திரை குழுவினர் வைகை ஆற்று படுகைகளில் மயில் இறகு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிகாலை 5:00 மணிக்கு ஆற்றுக்குள் மயில் இறகுகளை தேட ஆரம்பிக்கின்றனர். ஆரப்பாளையம் கண்மாய்கரை கல்லுாரி மாணவர் தர்மதேவன் கூறியதாவது: வைகை ஆற்றின் கரைகளில் மயில்கள் உலா வருகின்றன. நீண்ட தோகையை விரித்து மயில் உடல் சிலிர்க்கும்போது இறகுகள் கீழே விழும். மயில்கள் சண்டையிடும் போதும் இறகுகள் விழும். அதை சேகரித்து பத்திரப்படுத்துவோம். அழகான கண் உள்ள நீளமான இறகுகளை காவடி செய்ய பயன்படுத்துகிறோம். கண் இல்லாத இறகுகளை விளாங்குடி முருகன் கோயிலில் வைத்து விடுவோம். தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து காவடியாட்டப் பக்தர்கள் குழுவாக பழநி செல்கிறோம். இப்போதிலிருந்தே தேடினால் தான் மயில் இறகுகளை தேவையான அளவு சேகரிக்க முடியும். தினமும் மூன்று மணி நேரம் இறகுகளை சேகரிக்கிறேன், என்றார்.