ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் கடக சங்கரமணத்தில் திருமலையில் ஆனிவர ஆஸ்தானம் நடைபெறும். ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவர ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது.
அன்று தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளச் செய்வர். மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து பின்னர் வஸ்த்திரம், அட்சதை சமர்பித்தவுடன் நைவேத்தியம் நடைபெறும். பிறகு செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரியும் ஸாதிப்பர். அதன் பின்னர் பிரசாதம் விநியோகம் ஆகும். புஷ்ப பல்லக்கு: ஜூலை மாதத்தில் ஆனிவர ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று மாலை திருமலை மாட வீதிகளில் உபயநாச்சிமார்களுடன் மலையப்ப ஸ்வாமி பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவீதிவலம் வந்து பக்தர்களுக்கு திருக்காட்சியளிப்பார். அந்தக் காட்சியை காண்பவர்கள் கலியுக வைகுண்டம் இத்திருமலை என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.