வேங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு நடைபெறும். அபிஷேகமே வெள்ளிக்கிழமை அபிஷேகம். பிரதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடத்தப்படும் இந்த அபிஷேகம் கி.பி. 614 ஆண்டிற்கு முன்பிருந்தே நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தினை பகவத் ராமாநுஜாசார்ய ஸ்வாமிகள் எம்பெருமானின் திருமார்பில் உறையும் தங்க அலர்மேல் மங்கை உருவத்தினை அலங்காரம் பண்ணின வெள்ளிக்கிழமை முதற்கொண்டு பிரதி வெள்ளிக்கிழமையும் நடைபெறும்படிக்கு செய்தார்கள். ஆகாசகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்: முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த ஆகாசகங்கை தீர்த்தத்தினை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி; ஓம் ஸஹ ஸ்ரசீர்ஷா: புருஷ என்று புருஷசூக்தத்தினை தொடங்குவர். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர் ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து உரக்க உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்ச சூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர். ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் ஸ்வாமி திவ்விய மங்கள மூர்த்தியை பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய்மறந்து போவர்.
புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணிக்காலம் அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் மஞ்சளினால் ஸ்வாமி திருமார்பில் உறைந்துள்ள மஹாலக்ஷ்மிக்கும் கூட இந்த அபிஷேகம் நடைபெறும். எப்பொழுதோ, என்றோ ப்ரம்மா முதலான தேவதைகள் கோரிக்கைக்கு இனங்க கலியுக மக்களுக்காக நின்றருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசனின் உண்மை வடிவினை வக்ஷஸ்தல லக்ஷ்மியுடன் இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தின் போது மட்டுமே தரிசிக்க இயலும். எம்பெருமானுக்கு அபிஷேகம் ஆன பிறகு எம்பெருமானின் திருமார்பில் உள்ள தங்க அலர்மேல் மங்கைக்கும் அபிஷேகம் நடைபெறும். ஆர்ஜித சேவையாக நடத்துகின்ற இந்த அபிஷேக உத்ஸவம் பக்தர்களை மிகவும் கவர்கிறது. அபிஷேகத்திற்குப் பிறகு பக்தர்களனைவரின் மீதும் அபிஷேக தீர்த்தத்தினை சம்ப்ரோக்ஷணம் பண்ணுவதோடு அபிஷேக தரிசனம் நிறைவுறும்.