பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
சென்னை: பழநி மற்றும் அழகர் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக, 17.5 கோடி ரூபாயில், குடிநீர் வசதி செய்து தரப்படும், என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, புத்திரகாமேஸ்வரர் கோயிலில், 2.5 கோடி ரூபாய்; வேட்டவலம், அகத்தீஸ்வரர் கோயிலில், 1.10 கோடி; நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபங்கள் கட்டப்படும். திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோயில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சுப்பிரமணியசுவாமி கோயில், நெல்லை மாவட்டம், வீரராகவபுரம், வரதராஜபெருமாள் கோயில் உள்பட, எட்டு கோயில்களில், 4.26 கோடி ரூபாயில், புதிய அன்னதான கூடங்கள் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள, தண்டாயுதபாணி கோயிலுக்கு, பாலாறு படுகையில் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், கள்ளழகர் கோயிலுக்கு, 2.5 கோடி ரூபாயிலும் குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.