சங்கரன்கோவிலில் வெள்ளி பல்லக்கு மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் : பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2017 01:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் மாயமான 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ வெள்ளிப்பல்லக்கு வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயில் சைவமும், வைணமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் கோயிலாகும். இங்கு ஜூலை 27ம் தேதி ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி ஆடித்தபசு காட்சி நடக்கிறது. இந்நிலையில் 24.5 கிலோ எடையுள்ள அந்த பல்லக்கு காணாமல் போனதாக கோயில் அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.
2016 அக்டோபர் மாதம் வெள்ளி பல்லக்கினை பார்த்துள்ளனர். அதன் பிறகு துணை கமிஷனராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பொன் சுவாமிநாதன், சிவகங்கைக்கு மாறுதலாகி செல்லும்போது, புதிய அதிகாரி செல்லத்துரையிடம் ஒப்படைக்கும்போதுதான் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. மாயமாகி பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பிரிவு போலீசார் இன்னமும் துப்பு துலக்கவில்லை. சங்கரன்கோவில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் சொந்த தொகுதியாகும். அமைச்சர் தொகுதியில் முக்கிய கோயிலில் பல்லக்கு மாயமானதை பற்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட சட்டசபையில் கேட்க வில்லை என்பது பக்தர்களின் வேதனையாக உள்ளது. இவ் வழக்கை உள்ளூர் போலீசார் விசாரிக்க போதிய ஆர்வம் காட்டாமல் உள்ளதால், அரசு சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டுமென பக்தர்ள் விரும்புகின்றனர்.