பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் திரிபுர சுந்தரி சமேத, வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழா நாளை வங்குகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற சிவஸ்தலமாக, வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. நான்கு வேதங்கள் மற்றும் சமயகுரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக உள்ளதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். இக்கோவிலில் சித்திரை திருவிழா அடுத்து பிரதான விழாவாக ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆடிப்பூர விழாவில் திருக்கல்யாணம் வைபவம் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. இந்தாண்டு இப்பெருவிழா நாளை மாலை விநாயகர் உற்சவம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் காலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடை பெறுகிறது.தொடர்ந்து சுவாமி தினசரி காலை இரவு நேரங்களில் தொட்டி, அலங்கார விமானம், அதிகார நந்தி, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது.வரும், 23ல், திரிபுர சுந்தரி அம்மன் உற்சவமும், 27ல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான, 27ம் தேதி திரிபுர சுந்தரி அம்மனுக்கு மஹா அபிஷேகமும், திருக்கல்யாண கோலத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் விமரிசையாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.