பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
விருதுநகர்;சதுரகிரியில் உள்ள ஸ்ரீ சுந்தர மகாலிங்கம், ஸ்ரீ சந்தன மகாலிங்கம் கோயில்களில் தண்ணீர் பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி ஆடி அமாவாசை 10 நாட்கள் திருவிழாவை, 4 நாட்களாக குறைத்துள்ளனர். இதை 10 நாளாக உயர்த்த வேண்டும் என, கலெக்டரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் முறையிட்டுள்ளது. இதன் மாவட்ட செயலாளர் வெங்கிடசாமி வழங்கிய மனுவில், “சதுரகிரியில் உள்ள ஸ்ரீ சுந்தர மகாலிங்கம், ஸ்ரீ சந்தன மகாலிங்கம் கோயில்களில் மாவட்ட, மாநில பக்தர்கள் முதல் வெளிநாட்டு பக்தர்கள் வரை வந்து தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு ஆடி அமாவாசை 10 நாட்களுக்கு மேல் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் வனத்துறை, சிவகாசி கோட்டாட்சியரும் நுாறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தை மாற்றும் விதமாக, தண்ணீர் பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி 10 நாட்கள் திருவிழாவை, 4 நாட்களாக குறைத்துள்ளனர்.
ஒரு மதம் சார்ந்த பாரம்பரியம், பழக்கவழக்கங்களை அதிகாரிகளால் எப்படி மாற்ற முடியும் என உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. அதையும் மீறி இந்து சம்பிரதயங்களில் அதிகாரிகள் தலையிட்டு தடை விதித்துள்ளனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற சூடம் கொளுத்தி வழிபாடு செய்யும் முறைக்கும், வனத்துறை தடை விதித்துள்ளது. தடையை நீக்கி புதிய உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும், என, குறிப்பிட்டுள்ளனர்.