பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
கரூர்: ஆடி மாதம் நேற்று துவங்கியதால், கோவில்களில் புதுமண தம்பதியர் சுவாமியை வழிபட்டனர். சிறுவர், சிறுமியர் தேங்காய் சுட்டு, ஆடி மாதத்தை வரவேற்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத முதல் நாளில், காவிரி யாற்றில் பொதுமக்கள் குளித்துவிட்டு, கரையோர பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமியை வழிப் படுவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேரவில்லை. இதனால், கரூர் மாவட்டம் காவிரியாற்றின் கரையோர பகுதிகளான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், நெரூர் பகுதிகளில், குறைந்த அளவில் ஓடிய தண்ணீரில், பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். கரூரில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில்களில் புதுமண தம்பதியர் மற்றும் பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு திருமாநிலையூர், ராயனூர், அமராவதி ஆறு படிக்கட்டு துறை, கொளந்தானூர் உள்ளிட்ட இடங்களில் சிறுவர், சிறுமியர் தேங்காயை நெருப்பில் சுட்டு, விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று சுவாமியை வழிபட்டு, பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கி கொண்டாடினர்.