அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தோற்றுப் போன ஒருவர், பொதுக் கூட்டம் ஒன்றுக்கு சென்றார். அங்கே முதல்வர் பேசுவதாக இருந்தது. அவர் நம்பிக்கையுடன் ஒரு மனுவை எழுதிக் கொண்டு கூட்டத்தில் முண்டியடித்தார். கூட்டமோ நெருக்கியது. மேடையில் இருந்து இதை கவனித்து விட்டார் முதல்வர். அந்தப் பெரியவரை அழைத்து வரும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். மனுவைப் பெற்ற முதல்வர், வேண்டிய உத்தரவை மேடையிலேயே பிறப்பித்தார். இதுபோல் தான் ஆண்டவரும்... தன்னை நோக்கி மட்டுமே முன்னேறுகிறவர்களுக்கு கரம் கொடுப்பார். தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார் என்கிறது பைபிள். வேறு யாருக்கும் அஞ்ச வேண்டாம். கடவுளுக்கு மட்டுமே பயப்படுங்கள், அவரிடம் பயபக்தியோடு கோரிக்கைகளை எடுத்து வையுங்கள். உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.