பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
காஞ்சிபுரம்;கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து காஞ்சிபுரம் வரும் பக்தர்கள், குறைந்த வாடகையில் தங்கும் வசதி கிடைக்குமா என, எதிர்பார்க்கின்றனர். கோவில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், 108 திவ்விய தேச கோவில்கள், சைவ திருத்தலத்தில் பாடல் பெற்ற கோவில்கள், பழமையான கலை சிற்பங்கள் நிறைந்த கோவில்களும் உள்ளன. வெளி மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் காஞ்சிபுரம் வருகின்றனர். ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த வாடகையில் தங்கும் விடுதி இல்லை; இருந்த ஒரு யாத்ரி நிவாசும் தனியாரிடம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு தங்கி, மறு நாள் சுவாமியை நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில், ஒரு நாள் கட்டணமாக, சாதாரண அறைக்கு, 800 ரூபாய், ஏசி அறைக்கு, 1,200 - 1,900 ரூபாய் வரை கட்டணம் உள்ளது. எனவே, நடுத்தர மக்கள் அதிக செலவு செய்து, தனியார் விடுதிகளில் தங்க முடியாத நிலை உள்ளது.காஞ்சிபுரம் நகரில் அம்ருத் திட்டம் எனப்படும், மத்திய அரசின் திட்டப்படி வேலைகள் நடந்து வருகின்றன. அதனுடன் சேர்ந்து, பக்தர்கள் தங்கும் விடுதி ஏற்படுத்த வேண்டும், என, எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.