பதிவு செய்த நாள்
18
ஆக
2017
01:08
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் கார் நிறுத்துமிடம் பாதுகாப்பு இன்றி சமூக விரோதிகள் புகுந்து ’மதுபான பார்’ ஆக மாற்றி உள்ளதால், பக்தர்கள் முகம் சுளித்தனர். ராமேஸ்வரம் ஜெ.ஜெ.,நகரில் ராமநாதசுவாமி கோயில் சார்பில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. 200 வாகனங்கள் நிறுத்த முடியும். இங்கு ஒரு வாகனத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலித்தனர். பாதுகாப்பு குறைவால் பக்தர்கள் வாகன கண்ணாடியை உடைத்து பணம், அலைபேசியை திருடர்கள் அபேஸ் செய்தனர். இதன் பின் கோயில் நிர்வாகம் பார்க்கிங் பகுதியில் 8 சி.சி.டி.வி., கேமரா பொருத்தி, இரு காவலர்கள், இரு துப்புரவு பணியாளர்களை நியமித்து பராமரித்தனர். காலபோக்கில் கட்டணம் வசூலிப்பதில் முக்கியத்துவம் கொடுத்த நிர்வாகம், பாதுகாப்பில் கோட்டை விட்டனர். இங்கு காவலர்கள் பணியில் இல்லாததால், இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிக்கும் பார் ஆக மாற்றி உள்ளனர். இதனை அகற்றி சுகாதாரம் பராமரிக்க துப்புரவு ஊழியர்கள் யாரும் முன்வராததால் துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் அவதி: இங்குள்ள சுத்திகரிப்பு குடிநீர் மையம் பராமரிப்பு இன்றி கதவு உடைந்தும், இயந்திர பழுதால் பல நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாமல், பக்தர்கள் தாகம் தணிக்க முடியாமல் அவதிப்பட்டனர். சி.சி.டி.வி., கேமரா பழுதாகி கிடப்பதால் சமூக விரோத செயலை கண்டு பிடிப்பதில் சிரமம் உள்ளது. எனவே காவலர்கள், துப்புரவு ஊழியர்கள் நியமித்து, தடையின்றி குடிநீர் கிடைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.