ஞானசம்பந்தர், திருவெண்காடு சிவன் கோயிலுக்கு வந்தபோது, ஊரின் எல்லையில், எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகத் தோன்றியது. அதனால், ஊருக்குள் நடக்கப் பயந்தார். தன் கால்கள் சிவலிங்கம் பட்டால் அபச்சாரமாகி விடுமே என்று தயங்கினார். ஊர் எல்லையில் நின்று அம்பிகையை உதவிக்கு அழைத்தார். அவளும் ஓடோடி வந்து சம்பந்தரை இடுப்பில் துõக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். சம்பந்தரை துõக்கியபடி காட்சி அளித்ததால் ‘பிள்ளையிடுக்கி அம்மன்’ என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது. இக்கோயில், பிரம்மவித்யாம்பிகை சந்நிதியின் மேற்கு உள்பிரகாரத்தில் பிள்ளையிடுக்கி யம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது. சம்பந்தர் அம்பிகையை கூப்பிட்ட இடத்தில் உள்ள குளத்திற்கும் ‘கூப்பிட்டான் குளம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது ‘கோட்டான் குளம்’ என மருவி விட்டது.