பதிவு செய்த நாள்
24
ஆக
2017
12:08
செஞ்சி: மேல்மலையனுாருக்கு வரும் பக்தர்கள் போதுமான அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக உள்ளது.. இங்கு நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாசி தேர் திருவிழாவின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் அமாவாசையன்று வரும் பக்தர்களில் பெரும் பகுதியினர் ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின்னரும் இரவில் கோவிலிலேயே தங்கிவிட்டு அதிகாலையில் வீடு திரும்புகின்றனர்.
அடிப்படை வசதி: கோவிலில் தங்கும் பக்தர்களுக்கு தங்கும் இடம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோவில் சார்பில் கோவில் எதிரிலும், கொடுக்கன்குப்பம் சாலையிலும் மிக குறைந்த எண்ணிக்கையில் தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர். இந்த விடுதிகள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் சிபாரிசுகளுக்கு கொடுப்பதற்கே பற்றாக்குறையாக உள்ளது. சாதாரண பக்தர்களுக்கு இதில் தங்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த விடுதிகளிலும் கடந்த சில மாதமாக தண்ணீர் இன்றி பயன்படுத்த முடியாமல் பூட்டி வைத்துள்ளனர். விழா காலங்களில் கைக்குழந்தையுடன் இங்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. இதனால் வேறு வழியின்றி இங்குள்ள தனியார் விடுதிகளை தேடி செல்கின்றனர். அதிக கட்டணம் காரணமாக பலர் தெரு ஓரங்களிலும், கோவிலை சுற்றி உள்ள திறந்த வெளியிலும் தங்குகின்றனர்.
கழிவறைகள் இல்லை: கோவிலுக்கு வரும் பக்தர்களில் 10 சத வீதத்தினருக்கு கூட கழிவறை வசதிகள் இல்லை. அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பராமரிக்காமல் முடக்கி வைத்துள்ளனர். இலவச கழிப்பறைகள் என இருந்தாலும் இங்கும் பணம் கட்டினால் தான் உள்ளே அனுமதிக்கின்றனர். கழிவறை பற்றாக்குறை காரணமாக பலர் திறந்த வெளி இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேல்மலையனுார் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.
போலீஸ் ஸ்டேஷன்: விழாக்காலங்களில் கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு, மொபைல் போன் திருட்டு, பிக்பாக்கெட் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து புகார் செய்ய வளத்தி காவல் நிலையத்திற்கு வரவேண்டி உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பில்லை.
வேண்டும் விரிவாக்கம்: மேல்மலையனுாருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் விழா நடக்கும் இடத்தை விரிவிபடுத்தி, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். கோவிலுக்கு வந்து செல் லும் பிரதான சாலைகள் கடந்த 20 ஆண்டுகளாக விரிவு படுத்தப்படாமல் உள்ளது. இந்த சாலைகளை விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிதாக தங்கும் விடுதிகள், கழிவறைகள், மெகா அரங்கங்களை கட்ட வேண்டும்.அத்துடன் மிக குறைந்த கட்டணத்தில் ஏழை, எளியவர்கள் தங்குவதற்கு கழிவறை, குளியல் அறை வசதிகளுடன் விசாலமான உள்ளரங்க கூடங்களை ஏற்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையினர் பக்தர்களுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கான மெகா திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.