சொற்பொழிவு துறையில் கொடிகட்டிப் பறந்த கிருபானந்த வாரியார் ஒரு தமிழ்க் கடல். பாமரர்களிடமும் ஆன்மிகத்தை கொண்டு சேர்த்ததில் வாரியார் சுவாமிக்கு பெரும் பங்குண்டு. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் சொல்லுவான்? அருந்தவே இருந்தேன் என்பான். ராமனுடைய பாத கமலம், ராவணனுடைய பாதக - மலத்தை நீக்கியது! என்பன போன்ற தமிழ் நயம் நிறைந்த அழகிய வாக்கியங்களை போகிறபோக்கில் அநாயாசமாகச் சொல்ல கூடிய வல்லமை பெற்றவர் அவர். தம் சொற்பொழிவு நிறைவடைந்ததும் குழந்தைகளிடம் கேள்வி கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொன்னால் புத்தகங்களை பரிசளிக்கும் வழக்கமும் அவரிடம் இருந்தது. நடிகர் சிவாஜி நடித்த திருவிளையாடல் திரைப்படம் பற்றி, வார இதழ் ஒன்று அவரிடம் ஒரே வரியில் விமர்சனம் கேட்டது. சிவாஜி நல்ல முறையில் இந்த படத்தில் சிவ- ஜியாக நடித்திருக்கிறார்! என்று பதில் சொன்னார்.
ஒரு கூட்டத்தில் வாரியார் சுவாமிகளிடம், அவரை பற்றியே பேசுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தன்னை பற்றி என்ன பேசுவது என தெரியாமல் திகைத்தது வாரியாரின் மனம். அந்த கூட்டம் பெரியவர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியவர் அவரிடம் நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு காசிலும், உன் சொந்த செலவுக்குப் போக, மற்றவை அனைத்தையும் ஆலயத் திருப்பணிக்கே கொடுத்து விடுகிறாய் என்பதை சொல்வது தானே? என்று மக்கள் முன்னிலையில் கனிவோடு வாரியார் சுவாமிகளிடம் வினவினார்.
பெரியவரின் பாராட்டைக் கேட்டு வாரியார் சுவாமிகளின் இதயம் விம்மியது. என் குடும்பத்தாருக்கு கூடத் தெரியாத செய்தியை என்மேல் கொண்ட அன்பால், உலகம் அறியட்டும் என பெரியவர் பிரகடனப் படுத்தியுள்ளார் என நெகிழ்ந்தார் அவர். முதல்முறை பெரியவரை வாரியார் சுவாமிகள் தரிசிக்க சென்றபோது அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்க முயன்றார். வேண்டாம் என பெரியவர் கைநீட்டி தடுத்துவிட்டார். ஏன்? எனத் திகைப்போடு வாரியார் கேட்டதற்கு பெரியவர் சொன்ன பதில்: உங்கள் கழுத்தில் எப்போதும் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சிவ பக்தரான நீங்கள் என்னை விழுந்து வணங்கும்போது அந்த சிவலிங்கம் தரையில்படும் அல்லவா? சிவலிங்கம் அவ்விதம் தரையில் படக்கூடாது! அதனால் தான் அப்படி சொன்னேன்! தன்னையும் தன் சிவ பூஜையையும் பரமாச்சாரியார் எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்றறிந்து, வாரியார் மனம் பிரமிப்பில் ஆழ்ந்தது.