ஒரு தம்பதிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்நேரத்தில், அவர்கள் வீட்டுக்கு ஒரு போதகர் வந்தார். மனைவி அவரிடம், என் கணவர் ஆலயத்துக்கு போனால் தேவதூதன் போல நடந்து கொள்கிறார். வீட்டுக்கு வந்தால் பிசாசாக மாறி விடுகிறார், என்றாள். கணவன் போதகரிடம், நான் ஆலயத்திலாவது தேவ தூதனாக நடந்து கொள்கிறேன். இவள் ஆலயத்திலும் பிசாசாகத்தான் நடந்து கொள்கிறாள். இவளோடு வாழ்வதை விட நான் நரகத்திலேயே வாழலாம் என்றார்.
இப்படி பல கணவன், மனைவிகள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். பைபிளில், ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே! அத்தி மரம் ஒலிவப் பழங்களையும், திராட்சை செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? உவர்ப்பான நீருற்று, தித்திப்பான ஜலத்தைக் கொடுக்க மாட்டாது. உங்களில் ஞானியும், விவேகியுமாய் இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்கு உரிய சாந்தத்தோடு தன் கிரியைகளை நல்ல நடத்தையினாலே காண்பிக்கக் கடவன், என்ற வசனம் இருக்கிறது. இதன்படி, தேவனின் குழந்தைகளான நாம், அவரது குணங்களை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அவரால் உருவாக்கப்பட்ட நாம் அவரை போலவே நடந்து கொள்ள வேண்டும்.