பதிவு செய்த நாள்
08
செப்
2017
11:09
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நேற்று நடந்த ‘புலிக்களி’ நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் கலாசார தலைநகரான திருச்சூரில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், புலிக்களி (புலி விளையாட்டு) நடனம் நடந்தது. உடல் முழுவதும், புலியைப்போல, தத்தரூபமாக வர்ணம் தீட்டி, முகமூடி அணிந்து, 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நேற்று திருச்சூர் நகரை வலம் வந்தனர். மாலை 4:00 மணி முதல் இரவு வரை இந்த கொண்டாட்டம் நீடித்தது. திருச்சூரை சுற்றியுள்ள, பல்வேறு பகுதிகளில் இருந்து குழுவுக்கு, 41 முதல் 51 கலைஞர்கள் வீதம், புலிவேட மணிந்து விழாவில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு, வரலாற்றில் முதல் முறை யாக,மூன்று பெண்கள் புலி வேட மணிந்து நடனமாடினர். இந்தாண்டு, 12 பெண்கள் புலிவேட மணிந்து, வீதியுலா வந்தது, ஓணம் விழாவுக்கு மேலும் மெருகூட்டியது. கொட்டும் மழையிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், புலிக்களியை ரசித்து மகிழ்ந்தனர்.