புதுச்சேரி : திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது. இதற்காக, பாலஸ்தாபனம் இன்று நடக்கிறது.வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் பழமை வாய்ந்த கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவில், பழமையான கட்டடக் கலையை பிரதிபலிப்பதாக உள்ளது.இங்குள்ள மூலவரின் கருவறை திருவதிகை, தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை போல அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மூலவராக பதினாறு பட்டைகளைக் கொண்ட பெரிய லிங்கம் அமைந்துள்ளது. இம்மாதிரியான லிங்கங்கள் அபூர்வமானவையாகும். பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. எனவே, திருப்பணி செய்து, முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தாமோதரக் கவுண்டர் தலைமையில் திருப்பணிக் குழுவை அரசு அமைத்துள்ளது. திருப்பணி நடக்க உள்ளதை முன்னிட்டு, பாலஸ்தாபனம் இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. இந்த கோவில் திருப்பணி தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.