பதிவு செய்த நாள்
20
செப்
2017
01:09
ராமேஸ்வரம்: நவராத்திரி விழாவை யொட்டி, இன்று(செப்.20) ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருக்காப்பிடல் நிகழ்ச்சி முடிந்ததும், விழா துவங்குகிறது. நவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் குருக்கள் மந்திரம் முழங்க காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதனைதொடர்ந்து கோயிலில் நடக்கும் 10 நாள் விழா நடக்கும். இதில் செப்.,21 ல் பக்தர்களுக்கு பசி, பிணி நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் காட்சியளித்து, அருளாசி வழங்குவார். இதன் பின், செப்.,22 முதல் 29 வரை கோயிலில் அம்மன் சன்னதி அருகே பர்வதவர்த்தினி அம்மன் மகாலெட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கவுரி சிவபூஜை, சாரதாம்பிக்கை, கெஜலெட்சுமி, மகிஷாஸூரமர்த்தினி, துர்க்கா அலங்காரத்தில் காட்சியளிப்பார். செப்.,30 விஜயதசமி அன்று, கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகர்நோம்பு திடலில் அம்பு எய்தல் அரக்கனை வதம் செய்தல் நிகழ்ச்சி நடக்கும். அன்று மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி கோயில் நடை சாத்தப்படும். அம்பு எய்தல் நிகழ்ச்சி முடிந்து அம்மன், பஞ்சமூர்த்திகள் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறந்து, அர்த்தசாம பூஜை முடிந்ததும் மீண்டும் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.