மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில், பக்தர்களுக்கு அருள்புரிந்த காஞ்சி பரமாச்சாரியார், பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார். எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு, வயது எண்பதை தாண்டியிருந்தது. பக்தியால் உள்ளத்தில் உறுதி இருந்தாலும், முதுமையால் உடல் சற்று தளர்ந்திருந்தது. 150 கி.மீ., நடந்தால் தான் பண்டரிபுரத்தை அடைய முடியும். அதனால், பெரியவரது உடல்நலம் குறித்து அன்பர்கள் கவலைப்பட்டனர். அவரோ அதை சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார். வழியெங்கும் மக்கள் தரிசித்து மகிழ்ந்தனர். ஆள் அரவமற்ற இடங்களிலும் நடக்க வேண்டியிருந்தது. வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவர். மலைக்கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர். எண்பது வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது; இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர்.
அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல் வளர்ந்திருந்த அது உயரமாகவும், வலிமையாகவும் இருந்தது. அன்பர்கள் அதை விரட்ட முயற்சித்தனர். ஆனால், அது பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது பழம் கொடுங்கள்! என உத்தரவிட்டார் பெரியவர். கைவசமிருந்த வாழைப்பழங்களை நீட்ட, வாங்கிய குரங்கு, தோலை உரித்து சாப்பிட்டது. பின் பெரியவரை பார்த்தபடி ஒரு கல்லில் அமர்ந்தது. பெரியவரும் அதை பரிவுடன் பார்த்தபடி கீழே அமர்ந்தார். இந்த நயன பாஷை (கண்ணோட்டம்) சிறிது நேரம் நீடித்தது. பின்னர் குரங்கு திருப்தி அடைந்தது போல் மலையேறத் தொடங்கியது. மலை உச்சியில் இருப்பது என்ன கோயில் தெரியுமா? என்றார் பெரியவர். யாருக்கும் தெரியவில்லை. பெரியவர், மலையில் இருப்பது ஆஞ்சநேயர் கோயில். வயதான காலத்தில் நான் சிரமப்பட வேண்டாம் என எண்ணி, அந்த மாருதியே மலையிறங்கி வந்தாரோ என்னவோ? என்று சொல்லி கலகலவெனச் சிரித்து விட்டு பண்டரிபுரம் நகர்ந்தார். திருப்பூர் கிருஷ்ணன்